சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இலங்கை தூதுவர்: உடல் நிலை குறித்து தகவல்
சவுதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை நேரில் சந்தித்த சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல்.அமீர் அஜ்வாத் அனோஜன் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (08) தம்மாம் மத்திய சிறையில் உள்ள அனோஜனை சந்தித்த தூதுவர் அவரது உடல் நலம் மற்றும் தற்போதைய நிலை குறித்து விசாரித்ததாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, தூதுவர் அனோஜனுடன் கலந்துரையாடி, அவரது தேவைகள் மற்றும் கவலைகளைக் கேட்டறிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூதுவரின் உறுதிப்பாடு
அத்துடன், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் தூதரகம் வழங்கும் தூதரக மற்றும் சட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நேரடித் தொடர்பை எளிதாக்கும் வகையில், தூதுவர் அஜ்வாத் தனது தொடர்பு விபரங்களையும் அனோஜனிடம் பகிர்ந்துகொண்டதாகத் தூதரகம் தெரிவித்தது.
சந்திப்பிற்குப் பிறகு கருத்துத் தெரிவித்த தூதுவர், அனோஜன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், சவுதி சிறைச்சாலை அதிகாரிகள் அவரது நலனைக் கவனித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், தம்மாம் மத்திய சிறைச்சாலையின் பணிப்பாளர் மற்றும் மருத்துவரைச் சந்தித்த அஜ்வாத், இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தமைக்கும், அனோஜனுக்கு அளித்து வரும் கவனிப்புக்கும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தீவிர முயற்சி
உச்ச நீதிமன்றத்தில் அனோஜன் மேற்கொள்ளும் மேன்முறையீட்டு நடவடிக்கைகளுக்கும் தூதரகம் உதவி வருவதாக தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அனோஜன் சிவராசா சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த 27 வயதுடைய இலங்கையர் ஆவார்; நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் கருத்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இவர் கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகப் பதிவு தொடர்பாக மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத் தருவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.