மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சொகுசு பஸ் சாரதி கைது!
கெஸ்பேவ - கொழும்பு வீதியில் மிரிஸ்வத்தை பகுதியில் மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக, ஹொரணை - கொழும்பு வழித்தடத்தைச் சேர்ந்த தனியார் சொகுசு பஸ் சாரதி ஒருவர் பிலியந்தலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹதுடுவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மெட்ரோ பஸ்ஸுக்கு பின்னால் வந்த குறித்த சொகுசு பஸ், கெஸ்பேவ சந்தியிலிருந்தே பிரதான முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியும், தொடர்ச்சியாக ஒலியெழுப்பியபடியும், பாதுகாப்பற்ற முறையில் முந்திச் செல்ல முயன்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் மிரிஸ்வத்தை பகுதியில் திடீரென மெட்ரோ பஸ்ஸை முந்திச் சென்ற சொகுசு பஸ்ஸின் பின்பகுதி, மெட்ரோ பஸ்ஸின் முன் வலது மூலையில் மோதச் செய்து இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த விபத்தினால் மெட்ரோ பஸ்ஸின் வலது பக்கக் கண்ணாடியும், அதற்கு கீழே அமைந்திருந்த மற்றுமொரு கண்ணாடியும் உடைந்து சேதமடைந்துள்ளன.
இதனால் பஸ்ஸுக்கு ஏற்பட்ட மொத்த சேத மதிப்பு 342,000 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளதுடன், விபத்து நடக்கும் விதம் அருகில் உள்ள சிசிடிவி (CCTV) கெமராவிலும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான சாரதி, ஹொரணை - பொகுனுவிட்ட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவராவார்.
அவர் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பிலியந்தலைப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.