கொரோனா தொற்றிலிருந்து அமெரிக்கா மீண்டும் வழமைக்கு திரும்புகிறது - ஜோ பைடன்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அமெரிக்கா மீண்டும் வழமைக்கு திரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்று 50 நாள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியதுடன், 4 லட்சம் சிறிய வர்த்தக நிலையங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.
அத்துடன், 1 கோடியே 80 லட்சம் அமெரிக்கர்கள் தமது வேலையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எப்படியிருப்பினும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், படிப்படியாக பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளுக்கு அமைய, சர்வதேச ரீதியாக தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் அமெரிக்கர்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தொற்றுக்குள்ளான 2 கோடியே 91 லட்சத்து ஐம்பதாயிரத்து 68 பேரில், 52 இலட்சத்து 29 ஆயிரத்து 102 பேர் பலியாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.