வற்றிய குளத்தில் தென்பட்ட அதிசயம்: 65 அடி ஆழத்தில் சிக்கியிருந்த 300 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம்!
மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற திரிம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்க கோயில் வளாகத்தில் உள்ள ‘அமிர்த குண்டம்’ குளத்தைச் சுத்தம் செய்தபோது, பல நூற்றாண்டுகளாக நீரில் மறைந்திருந்த பழமையான சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள பிரசித்தி பெற்ற திரிம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கக் கோயிலில், காலத்தின் ஓட்டத்தில் மறைந்து போன வரலாற்று அதிசயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 65 அடி ஆழமுள்ள கோயில் குளத்தை சுத்தம் செய்தபோது கிடைத்த இந்த சிவ லிங்கம், பக்தர்களையும் ஆய்வாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குளத்தின் அடியில் என்ன இருக்கிறது?
கோயில் வளாகத்திற்குள் 'அமிர்த குண்டம்' அல்லது 'அமிர்தவர்ஷினி' என்று அழைக்கப்படும் வரலாற்றுப் பெருமைமிக்க குளம் ஒன்று உள்ளது. பல தசாப்தங்களாக குளத்தின் அடியில் வண்டல் மண் மற்றும் குப்பைகள் தேங்கிக் கிடந்தன. இதனைச் சுத்தம் செய்ய இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை களமிறங்கியது. தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி, அடுக்கடுக்காகப் படிந்திருந்த மண்ணை நீக்கியபோதுதான், யாரும் எதிர்பார்க்காத அந்த அதிசயம் நடந்தது. நீண்ட காலமாக நீரில் மூழ்கி, மக்களின் நினைவுகளில் மட்டும் வாழ்ந்த அந்த அழகிய சிவலிங்கம், இப்போது கம்பீரமாகத் தலைகாட்டியுள்ளது.
300 ஆண்டுகால மர்மம்?
இந்தச் சிவலிங்கம் எவ்வளவு பழமையானது என்பது இன்னும் ஒரு புதிராகவே நீடிக்கிறது. அறிவியல் ரீதியான ஆய்வுகள் இன்னும் முழுமை பெறவில்லை என்றாலும், வரலாற்றின் பக்கங்கள் சுவாரசியமான கதைகளைச் சொல்கின்றன. பேஷ்வா பாலாஜி பாஜிராவ் 1755-1786 கால கட்டத்தில் கோயிலை மீண்டும் கட்டியெழுப்பினார். அந்த வகையில் இது குறைந்தபட்சம் 240 ஆண்டுகள் பழமையானது. 1690-ல் ஔரங்கசீப் படையெடுப்பின்போது கோயில் அழிக்கப்பட்ட நிலையில், லிங்கத்தைப் பாதுகாப்பதற்காக அது தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் இதன் வயது 335 ஆண்டுகளைத் தாண்டும்.
பல நூற்றாண்டுகளாகச் சிதையாத ரகசியம்
நீருக்கு அடியில் இவ்வளவு காலமாக இருந்தும்கூட, ஒரு சிறு கீறல் கூட விழாமல் இந்தச் சிலை எப்படி இவ்வளவு பாதுகாப்பாக இருந்தது? இதற்கு விடை, அந்தப் பகுதி நிலவியல் அமைப்பில் உள்ளது. நாசிக் பகுதி எரிமலைக் குழம்புகளால் உருவான 'பாசால்ட்' (Basalt) கற்களால் ஆனது. இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வானிலை மாற்றங்களை எதிர்த்து நிற்கும் வலிமை கொண்டவை. தண்ணீருக்கு அடியில், சூரிய ஒளியின் தாக்கம் மற்றும் தட்பவெப்ப மாற்றங்கள் இன்றி, வண்டல் மண்ணால் ஒரு மென்மையான போர்வையைப் போல மூடப்பட்டிருந்ததே இந்தச் சிற்பத்தின் நீண்ட ஆயுளுக்குக் காரணம்.
நிதானமான பராமரிப்பு, கிடைத்த பொக்கிஷம்
இந்தக் கண்டுபிடிப்பு ஏதோ அதிரடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கவில்லை. பொறுமையாகவும், நிதானமாகவும் செய்யப்பட்ட 'டீசில்டிங்' (Desilting) எனப்படும் வண்டல் மண் அகற்றும் பணியின் மூலமே இது சாத்தியமானது. குழாய்கள், சேறு, சுத்தம் செய்யும் பணியாளர்கள் என ஒரு சாதாரண பராமரிப்பு பணியாக தொடங்கிய இது, இறுதியில் ஒரு வரலாற்றுப் பொக்கிஷத்தை உலகுக்குக் காட்டியிருக்கிறது. தற்போதைக்கு, இந்த சிவலிங்கம் கோயில் வரலாற்றின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகே இதன் காலத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும். இருப்பினும், கோயில் தரைப்பகுதியின் ஒரு துண்டு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, வரலாற்றின் மீது ஆர்வமுள்ளவர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.