மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது

தமிழகத்தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தொகு​தி​களுக்​கான இடைத்​தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று முடிவடைகிறது. ஆளும் தவெக மற்றும் திமுக, அதிமுக கட்சியினர் கடைசிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலை அமைதியாக நடத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய 2 தனித் தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் ஒக்​டோபர் 6-ம் திகதி நடை​பெறுகிறது. இதற்கான வேட்​புமனு தாக்​கல் கடந்த செப்​டம்பர் 9-ம் திகதி தொடங்கி 16-ம் திகதி முடிவடைந்​தது. 

மது​ராந்​தகம் தொகு​தி​யில் மரகதம் குமர​வேல் (தவெக), பரந்​தாமன் (திமுக), கணிதா சம்​பத் (அதி​முக), சுகந்​தி (மார்க்​சிஸ்ட்), ஜானகி​ராமன் (நாம் தமிழர்) மற்​றும் சுயேச்சை​கள் என மொத்​தம் 28 பேர் களத்​தில் உள்​ளனர். 

அதே​போல், தாராபுரம் தொகு​தி​யில் சத்​ய​பா​மா (தவெக), சுகன்​யா (திமுக), பானு​ம​தி (அதி​முக), லட்​சுமணன் (இந்​திய கம்​யூனிஸ்ட்), கார்த்​திகா (நாதக) உள்​ளிட்​டோர் போட்​டி​யிடு​கின்​றனர். 

தவெக வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் விஜய் செப்​டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2-ம் திகதி, மது​ராந்​தகம் தொகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்​தார். செப்​டம்பர் 30-ம் திகதி தாராபுரம் தொகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்த முதல்​வர், மீண்​டும் இன்று அங்கு பிரச்​சா​ரத்​துக்குச் செல்​கிறார். 

திமுக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக அந்தக் கட்​சித் தலை​வர் மு.க.ஸ்​டா​லின், இளைஞரணி செய​லா​ளர் உதயநிதி உள்​ளிட்​டோரும், அதி​முக வேட்​பாளர்​களை ஆதரித்து அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும் பிரச்​சா​ரம் செய்​தனர். 

கம்​யூனிஸ்ட் வேட்​பாளர்​களுக்கு வாக்கு கேட்டு அக்​கட்​சிகளின் மாநில நிர்​வாகி​களும், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானும் இரு தொகு​தி​களி​லும் தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்​டனர். 

இந்நிலையில் இரு தொகு​தி​களி​லும் இடைத்​தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று மாலை 6.00 மணி​யுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இறு​தி​ கட்ட வாக்கு சேகரிப்​பில் வேட்​பாளர்​களும், கட்சி நிர்​வாகி​களும் தீவிரம் காட்டி வரு​கின்​றனர். 

பிரச்சாரத்துக்கு இன்று கடைசி நாள் என்பதால், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழக முதல்வர் விஜய் இன்று தாராபுரம் வருகிறார். இதற்காகக் கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் வரும் முதல்வர் விஜய், பிரம்மாண்ட ‘ரோட் ஷோ’ மூலம் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். 

தொடர்ந்து ஒக்டோபர் ​6-ம் திகதி வாக்​குப்​ப​தி​வும், 9-ம் திகதி வாக்கு எண்​ணிக்​கை​யும் நடை​பெறுகிறது. வாக்​குப்​ ப​திவையொட்​டி தொகு​தி முழு​வதும்​ பலத்​த பாது​காப்​பு ஏற்​பாடுகள்​ செய்​யப்​பட்​டுள்ளன. அத்துடன் தொகுதிகளில் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளும் அமுலுக்கு வரவுள்ளன.