யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் தடம் பதித்த அல்பிரட் தம்பிஐயா!
அல்பிரட் லியோ சவேரிமுத்து தம்பிஐயா அவர்கள் 1903 நவம்பர் 8 அன்று யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேசத்திலுள்ள கரம்பொனில் பிறந்தார். இவர் ஓர் இலங்கைத் தமிழ் தொழிலதிபர், அரசியல்வாதி மற்றும் முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் பயின்றார். தொடர்ந்து தனது கல்வியை யாழ்ப்பாணத்தில் உள்ள புனித பத்திரிசியார் கல்லூரியிலும், பின்னர் கொழும்பில் உள்ள புனித ஆசீர்வாதப்பர் (பெனடிக்ட்) கல்லூரியிலும், புனித சூசையப்பர் (யோசப்) கல்லூரியிலும் தொடர்ந்தார். அதன் பிறகு, சட்டம் பயில்வதற்காக அவர் லண்டனுக்குச் சென்றார்.
தம்பிஐயா அவர்கள் தனது 21வது வயதில் ஒலிம்பியா திரையரங்கைக் குத்தகைக்கு எடுத்து தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் கொழும்பை தளமாகக் கொண்ட தொழிலதிபர் சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினருடன் இணைந்து வெற்றிகரமான சிலோன் தியேட்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தை நிறுவினார். இலங்கையர்களுக்கு அசையும் திரைப்படத்தை அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். இந்தியர்களின் ஏகபோக வர்த்தகமான திரையரங்க வணிகத்தை ஆட்டங்காண வைத்தவராக இவர் விளங்கியதோடு 1970 களில் Hotel Renuka எனும் நிறுவனத்தை கொள்ளுப்பிட்டியில் உருவாக்கி விருந்தோம்பல் துறைசார் வணிக முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
பின்னர் சிலோன் தியேட்டர்ஸ், கார்கில்ஸ் & மில்லர்ஸ் நிறுவனத்தை வாங்கியது, தம்பையா அவர்கள் அதன் தலைவர்/நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார்.
இவர் 1936-ல் ஹாரி மற்றும் ஜான் காஸ்மாஸ் ஆகியோரிடமிருந்து கார்கோ போட் டிஸ்பாட்ச் கம்பெனி (Cargo Boat Dispatch Company) என்ற கப்பல் நிறுவனத்தைக் கொள்வனவு செய்தார். இந்நிறுவனம் கொழும்பு துறைமுகத்தின் பெரும்பாலான வணிகத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு வளர்ந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளரான அல்ஃபிரட் தம்பிஐயா, 1947 நாடாளுமன்றத் தேர்தலில் ஊர்காவற்றுறைத் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். கடுமையான போட்டிக்குப் பிறகு, தனது போட்டியாளரான தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ஏ. வி. குலசிங்கத்தை 322 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
அல்பிரட் தம்பிஐயா அவர்கள் பின்னர் 1952 தேர்தலில் போட்டியிட்டு கிட்டத்தட்ட 4000 வாக்குகள் பெரும்பான்மையாகப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1955-ல் தனது நெருங்கிய நண்பரும் பிரதம மந்திரியுமான ஜான் கொத்தலாவெல வடக்குக்கு வருகைததந்தபோது நெடுந்தீவுக்கும் வர ஏற்பாடானது. திரு. தம்பிஐயா அவர்கள் பிரதமருக்கு ஒரு உற்சாகமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்தார்.
வடக்கிலுள்ள தமிழர்கள் தனக்கு அளித்த வரவேற்பால் நெகிழ்ந்துபோன பிரதமர், கொக்குவிலில் அவருக்காக நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பின்போது பேசுகையில், சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்குவதே தமது கட்சியின் கொள்கை என்று கூறினார்.
அப்போது பிரதமர் ஜான் கொத்தலாவெல, தெற்கில் ஏற்படவிருந்த பெரும் கொந்தளிப்பை ஒருபோதும் கற்பனை செய்திருக்கவில்லை. இதற்கிடையில், தேர்தல் நெருங்கிவிட்டதை உணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, தாம் தேர்தலில் வெற்றி பெற்றால், ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் சிங்களத்தை உத்தியோகப்பூர்வ மொழியாக ஆக்குவேன் என்று கூறி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இதன் விளைவாக, கட்சிக்குள் ஜோண் கொத்தலாவெலவுக்குப் பெரும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், 1956-ல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில், சிங்களமே ஒரே உத்தியோகப்பூர்வ மொழியாக இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன் விளைவாக, அல்பிரட் தம்பிஐயா தலைமையில் அனைத்துத் தமிழ் ஆதரவாளர்களும் வெளிநடப்பு செய்தனர். இந்தத் துணிச்சலான செயல், திரு. தம்பிஐயா தமிழ் சமூகத்தின் உணர்வுகளுக்கு எவ்வளவு மதிப்பளித்தார் என்பதைக் காட்டியது.
1956 தேர்தலில் ஃபெடரல் கட்சி வேட்பாளர் வி. ஏ. கந்தையாவிடம் அல்பிரட் தம்பிஐயா தோல்வியடைந்தபோதிலும், 1958 மே 23 அன்று தொடங்கிய இனவாதக் கலவரங்களின்போது அவரது பெருந்தன்மை வெளிப்பட்டது.
நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வேளையில், தமிழர்களின் பல குடியிருப்புகளும் வணிக நிறுவனங்களும் சூறையாடப்பட்டு பின்னர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்திருந்தபோதிலும், பிரதமர் பண்டாரநாயக்க தமிழர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சிங்களக் குண்டர்கள் பக்கம் நின்று வன்முறையைத் தூண்டினார்.
மகா தேசாதிபதி ஒலிவர் குணதிலக்க வின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முக்கிய தமிழர்கள் அடங்கிய தூதுக்குழுவை வழிநடத்திச் சென்ற திரு. தம்பிஐயா அவர்கள் நெருக்கடியான தருணத்தில் தமிழர்களின் பாதுகாப்பு இன்றியமையாதது என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழர்களை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அவர்களின் பாரம்பரிய தாயகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, தனது மூன்று கப்பல்களையும், தனது வணிக சகாக்களின் பத்து கப்பல்களையும் வழங்க முன்வந்தார்.
மகா தேசாதிபதி இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டபோதிலும், பொதுமக்களை வடக்கிற்கு அழைத்துச் செல்ல சிறப்பு கடல்வழி எதுவும் இல்லை என்றும், அரசாங்கத்தின் அனுமதியின்றி தீவைச் சுற்றியுள்ள கடலில் வெளிநாட்டுக் கப்பல்களைச் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டி பிரதமர் பண்டாரநாயக்க இந்த நடவடிக்கையை எதிர்த்தார்.
இதனால் பிரபல குற்றவியல் வழக்கறிஞர் திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்களின் துணையை நாட அவர் "அவசர காலங்களில் கப்பல் மூலம் பொதுமக்களைக் கொண்டு செல்ல ஏற்பாடு உள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.
அவர் அவசரகால சூழ்நிலைகளை சுட்டிக்காட்டியதோடு பிரதமரின் கூற்று தவறென்பதையும் நிரூபித்தார்.
இதனால் பிரதமர் வன்முறையைத் தூண்டுவதில் இருந்த ஆர்வம் முற்றிலும் தகர்க்கப்பட்டது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல பதின்மூன்று கப்பல்கள் தயார் செய்யப்பட்டன. மேலும், எஸ். எஸ். லாவோஸ் என்ற பிரெஞ்சு சொகுசுக் கப்பல் அந்த 13 கப்பல்களுக்கும் தலைமை தாங்கி துறைமுகத்திற்குள் வந்தது.
பின்னர் தம்பிஐயா அவர்கள், கொழும்பில் இருந்த செல்வந்த வணிகர்களை விரைவாகத் தொடர்புகொண்டு, இந்தக் கப்பல்களில் பயணித்த பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவளிப்பதற்காக உலர் உணவுப் பொருட்களை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்தார். 4 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கப்பல்கள் வடக்குப் பகுதியைச் சென்றடைந்தன, இவ்வாறு 3000 தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
தம்பிஐயா அவர்கள் 1960-ல் மீண்டும் நான்காவது முறையாக ஊர்காவற்றுறைத் தொகுதியில் போட்டியிட்டார்.
தொடர்ந்து அதிகரித்து வந்த பெடரல் கட்சியின் செல்வாக்கு மற்றும் ஆதிக்கத்தின் காரணமாக இவர் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
1960-க்குப் பிறகு இவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை, ஆனாலும் பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி தொடர்ந்து உதவினார். இவரை அணுகி எவர் வேலை கேட்டாலும் அவருடைய தகுதிக்குரிய வேலையை வழங்குவாரே அன்றி ஒருபோதும் மறுக்காதவர். இவருக்கு சொந்தமான பண்டகசாலையை ஊர்காவற்றுறை மக்கள் "தம்பிஐயா கிட்டங்கி" என்று இன்றும் அழைக்கின்றனர். இது பகுதியளவில் சிதைவுற்ற நிலையில் இன்றும் ஊர்காவற்றுறை நகரில் உள்ளது. ஊர்காவற்றுறை சிறப்புமிக்க துறைமுகமாக விளங்கிய காலத்தில் கப்பலிலிருந்து இறக்கப்படும் பொருட்கள் இங்கே வைத்து பேணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து ஊர்காவற்றுறை மற்றும் புங்குடுதீவு வரை சாலை இணைப்புகளை அமைப்பதில் தம்பையா முக்கியப் பங்காற்றினார்.
மேலும் அவர் தீவகத்தில் பாடசாலைகள், மருத்துவமனைகள், மற்றும் தபால் நிலையங்கள் கட்டுவதற்கும் உதவினார்.
பெருவணிகராகவும் சிறந்த தமிழரசியல் வாதியாகவும் திகழ்ந்த இவர் ஓர் தவிர்க்க முடியாத ஆளுமை.
மூலாதாரங்கள்
Historical record of kayts
Sunday times paper
Wikipedia
வாய்மொழிச் சான்றுகள்
எழுத்தாக்கம்:- Antonyfernando Jeniefar